நாகையில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்வு

அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால் நாகையில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

Update: 2023-08-19 19:00 GMT

அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால் நாகையில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

நேதாஜி பூ மார்க்கெட்

நாகை பழைய பஸ் நிலையம் அருகே நேதாஜி பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. வேதாரண்யம், ஓசூர், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்த மார்க்கெட்டில் முல்லை, கேந்தி, செவ்வந்தி, சம்பங்கி, முல்லை, மல்லி, ரோஜா உள்ளிட்ட பலவகையான பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் 5 டன் முதல் 6 டன் வரை பூக்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

முகூர்த்த நாட்கள்

சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படும். அதேபோல மழை, பனிக்காலங்களில் பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும்.

இந்த நிலையில் தற்போது ஆவணி மாதம் பிறந்து விட்டதாலும், ்அடுத்தடுத்து 2 நாட்கள் முகூர்த்தநாட்கள் என்பதாலும் நாகையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் நாகை மார்க்கெட்டில் பூக்கள் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது.

விலை நிலவரம்

கடந்த வாரம் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல் ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1000-க்கும், ரூ.400-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.800-க்கும், ரூ.250-க்கு விற்ற சம்பங்கிப்பூ ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ரூ.150-க்கு விற்ற அரளி ரூ.300-க்கும், ரூ.150-க்கு விற்ற செவ்வந்திப்பூ ரூ.400-க்கும், ரூ.150-க்கு விற்ற ரோஜாப்பூ ரூ.350-க்கும் விற்பனையானது.

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது:-

மகசூல் பாதிப்பு

பூக்கள் விளைச்சல் உள்ள மாவட்டங்களில் சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால் நாகையில் கடந்த சில வாரங்களாகவே பூக்களின் வரத்து குறைந்து காணப்பட்டது.

விலையும் சற்று அதிகரித்தே இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து 2 நாட்கள் முகூர்த்தம் என்பதால் பூக்களின் விலை இரு மடங்காக அதிகரித்து உள்ளது. குறிப்பாக மல்லி, முல்லைப் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்து உள்ளது. இருந்தும் பொதுமக்கள் விலையை பொருட்படுத்தாமல் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்