செவ்வந்திப் பூக்களின் விலை சரிவு

கும்பகோணத்தில் செவ்வந்திப் பூக்களின் விலை சரிவடைந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனா்.

Update: 2023-01-14 18:45 GMT

கும்பகோணத்தில் செவ்வந்திப் பூக்களின் விலை சரிவடைந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனா்.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி கும்பகோணம் பகுதியில் உள்ள பூ வியாபாரிகள் விற்பனைக்காக அதிக அளவில் பூக்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

கும்பகோணம் பகுதியில் உள்ள மலர் சந்தைக்கு செவ்வந்திப் பூ மற்றும் சாமந்தி பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த பூக்களின் விலை சரிவடைந்துள்ளது.

செவ்வந்தி பூக்கள்

நேற்று கும்பகோணம் பகுதியில் செவ்வந்தி பூக்கள் கிலோ ரூ.60 முதல் ரூ.120- க்கு விற்பனையானது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்ட செவ்வந்தி பூக்களை பொதுமக்கள் அதிகளவில் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூக்கள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. சாதாரணமாக செவ்வந்தி பூக்கள் கிலோ ரூ.200- க்கு மேல் விற்பனை செய்யப்படுவது வழக்கம். பண்டிகை நாட்களில் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதால் விலை குறைந்து விற்கப்படுகிறது. செவ்வந்தி பூக்கள் தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ. 60 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செண்டிப்பூ கிலோ ரூ.60- க்கு விற்பனையாகிற தற்போது பனிப்பொழிவு காரணமாக மகசூல் குறைந்ததால் காக்கரட்டான் பூ வரத்து குறைவாக உள்ளது.

இதனால் காக்கரட்டான் ஒரு கிலோ ரூ. ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் வாங்க வரும் பொதுமக்கள் செவ்வந்தி பூக்களின் விலை குறைவாக இருப்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பூக்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்