வீரமரணம் அடைந்த போலீசாருக்கு மலர் அஞ்சலி

பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2023-10-21 18:45 GMT

வீரவணக்க நாள்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டு தோறும், அக்டோபர் 21-ந் தேதி போலீசார் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஓராண்டில் பணியின் போது வீரமரணம் அடைந்த 188 போலீசார் மற்றும் ராணுவ படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நேற்று நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீசார் நினைவு சின்னத்தில் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்பட்டது.

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி., கலெக்டர் உமா, ராமலிங்கம் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் ஆகியோர் பணியில் இருக்கும் போது இன்னுயிர் நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இறந்த போலீசாருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, 90 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.

உறுதிமொழி ஏற்பு

இந்த ஆண்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டுப் பிரிந்த போலீசாரின் எண்ணிக்கை 188. மடிந்த இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என உறுதி பூண்டு, அவர்களின் வீரத்தியாகம் வீண்போகாது என, போலீசார் வீரவணக்க நாளில் உறுதிமொழி ஏற்போம்' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்