வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு

பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2022-08-27 17:13 GMT

பெண்ணாடம், 

கடலூர், அரியலூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆனைவாரி ஓடை, உப்பு ஓடை மற்றும் சின்னாறு வழியாக மழைநீர் பெண்ணாடம் வெள்ளாற்றில் கலந்தது. மேலும் விளைநிலங்களில் தேங்கிய மழைநீரும் வெள்ளாற்றில் வடிய வைக்கப்பட்டதால் தற்போது வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த வெள்ளநீர் நேற்று காலை பெண்ணாடம் அருகே சவுந்திரசோழபுரம்- கோட்டைகாடு இடையே உள்ள வெள்ளாற்றுக்கு வந்தது. அப்போது ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால், வெள்ளாற்றின் குறுக்கே கடலூர்-அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

போக்குவரத்து துண்டிப்பு

இதனால் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைக்காடு, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, தெத்தேரி, முதுகுளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 15 கிலோ மீட்டர் சுற்றி முருகன்குடி வழியாக சென்று கடலூர் மாவட்டத்திற்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய தேவைக்காகவும், விளை நிலங்களுக்கும் இந்த தரைப்பாலத்தின் வழியாக சென்று வந்த பொதுமக்கள் தற்போது கடும் அவதியடைந்துள்ளனர்.

பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஒவ்வொரு மழையின் போதும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் கோட்டைக்காடு-சவுந்திர சோழபுரம் இடையே வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கு 2013-ம் ஆண்டில் ரூ.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கியது. இதில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், நிதிபற்றாக்குறையை காரணம் காட்டி, மீதமுள்ள பணிகளை தொடராமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்டனர். அதனால் அரசு தனி கவனம் செலுத்தி மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்