ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வால்பாறையில் விடிய விடிய கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பேரிடர் மீட்பு படை போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

Update: 2023-07-04 19:15 GMT

வால்பாறை

வால்பாறையில் விடிய விடிய கனமழை பெய்வதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பேரிடர் மீட்பு படை போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

கனமழை பெய்தது

வால்பாறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்ய தொடங்கியது. பின்னர் அது தீவிரம் அடைந்து இரவு பகலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.


இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மாநில பேரிடர் மீட்பு படை துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் மிதவை படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் 100 போலீசார் வால்பாறையில் உஷார் நிலையில் முகாமிட்டு உள்ளனர்.

சாலையில் மரம் விழுந்தது


அவர்களை பொள்ளாச்சி சப் -கலெக்டர் பிரியங்கா சந்தித்து மழை வெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது வால்பாறை தாசில்தார் அருள்முருகன் உடன் இருந்தார்.


மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதை சோலைகுறுக்கு என்ற இடத்தில் மரம் விழுந்தது. இதனால் அங்கு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த தாசில்தார், போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ரோட்டில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சரியானது.


அய்யர்பாடி எஸ்டேட் புனித வனத்துச்சின்னப்பர் ஆலய வளாக சுற்றுச்சுவர் மழையில் நனைந்து இடிந்து விழுந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மேல்நீராறு- 127 மி.மீ., கீழ்நீராறு 108 மி.மீ., சோலையாறு அணை- 70 மி.மீ., வால்பாறை- 54 மி.மீ. மழையும் பெய்துள்ளது.


மழை காரணமாக சோலையாறு அணைக்கு வினாடிக்கு 2,133 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் ஒரே இரவில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி சோலையாறு அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டி இருந்தது.

தயார் நிலை

ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தீவிரம் அடை யாமல் உள்ளது. ஆனாலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இது தொடரும் பட்சத்தில் சோலையாறு அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

வால்பாறை தாசில்தார் அருள்முருகன் தலைமையில் வருவாய் துறை, நகராட்சி ஆணையாளர் (பொ) வெங்கடாசலம் தலைமை யில் நகராட்சி பணியாளர்களும், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.


மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஆற்றங்கரையோர குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நிவாரண முகாம்களும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ குழுவினரும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


மேலும் செய்திகள்