கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-19 17:14 GMT
குறுவை சாகுபடி பணிகளுக்காக டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட கூடுதல் தண்ணீர் காவிரி, கொள்ளிடத்தில் ஆர்ப்பரித்து செல்கிறது.

அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நேற்று முற்பகல் முதல் தண்ணீர் வரத்து அதிகரிக்க ஆரம்பித்தது. தண்ணீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்ததால் கொள்ளிடம் ஆறு கடல் போல காட்சி அளிக்கிறது. இதனை அப்பகுதி மக்களும், விவசாயிகளும் திரண்டு வந்து பார்த்து வருகின்றனர்.

ஆடு-மாடுகள் மீட்பு

இந்தநிலையில், கொள்ளிடம் ஆற்றில் சந்தபடுகை கிராமத்தைச் சேர்ந்த 10 எருமை மாடுகள் ஆற்றின் நடுவில் உள்ள திட்டில் சிக்கிக் கொண்டன. தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் அந்த மாடுகளின் உரிமையாளர் ஆற்றில் நீந்திச் சென்று மாடுகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். இதேபோல, கொள்ளிடம் அருகே உள்ள சரஸ்வதிவிளாகம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் திட்டில் தவித்த 12 ஆடுகளை கொள்ளிடம் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

கிராமங்களில் அதிகாரிகள்

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடுவதால் கொள்ளிடம், சந்தப்படுகை, நாதல்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடு உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் மற்றும் அதிகாரிகள், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்களை மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், ஆற்றின் கரையோர கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு ஒலிபெருக்கி மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இந்தநிலையில், பொதுப்பணித்துறையின் மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் உத்தரவின்பேரிலும், சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆலோசனையின்பேரிலும், கொள்ளிடம் உதவி பொறியாளர் சிவசங்கரன் தலைமையில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக முதற்கட்டமாக கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் 1000 மணல் மூட்டைகள் மற்றும் 5 டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொள்ளிடம் ஆற்றின் கரைப்பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்