கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-13 18:08 GMT



குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு தடை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணைக்கு கடந்த சில தினங்களாக ஆந்திராவில் பெய்த கனமழையால் அதிக அளவு தண்ணீர் வருகிறது. இதனால் அணை நிரம்பி நேற்று காலை முதல் வினாடிக்கு 1,700 கன அடி தண்ணீர் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் குடியாத்தம் நகரத்தின் நடுவே செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு முதல் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

தரைப்பாலத்தை தாண்டி வெள்ளம் செல்வதால் நேற்று குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், தாசில்தார் எஸ்.விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் பி.சிசில் தாமஸ் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

மாற்றுப்பாதை



கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் காமராஜர் பாலத்தின் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் காமராஜர் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெறுவதால், மேல் பட்டி வழியாக ஆம்பூர் மற்றும் பேரணாம்பட்டு செல்லும் கனரக வாகனங்கள் குடியாத்தம்- காட்பாடி ரோடு நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருந்து காட்பாடி சாலை வழியாக பசுமாத்தூர் அல்லது வடுகந்தாங்கல் வழியாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆம்பூர் மற்றும் பேரணாம்பட்டு பகுதியில் இருந்து குடியாத்தம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் பள்ளிகொண்டா நெடுஞ்சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து மோர்தானா அணைக்கு அதிக அளவு தண்ணீர் வருவதால் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் நீர்வளத்துறை வேலூர் கோட்ட பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில், நீர்வளத்துறை நீர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்