தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்கு 4-வது நாளாக தடை
தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.;
தேனி,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து கிடைக்கிறது. இங்கு தினமும் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 12-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதையடுத்து நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால் 4-வது நாளாக இன்று அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.