கொட்டித்தீர்த்த கனமழையால் மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

கடமலைக்குண்டு அருகே கொட்டித்தீர்த்த கனமழையால் மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

Update: 2023-05-28 21:00 GMT

கடமலைக்குண்டு அருகே கொட்டித்தீர்த்த கனமழையால் மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

மேகமலை அருவி

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழுவில் 'சின்னசுருளி' என்ற மேகமலை அருவி உள்ளது. இந்த அருவிக்கு தேனி மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக மேகமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லை. இதனால் மேகமலை அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இருப்பினும் அருவியில் குறைந்த அளவு தண்ணீர் கொட்டியது. தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் அருவியில் கொட்டிய குறைந்தளவு தண்ணீரிலும் ஆனந்தமாக குளித்தனர்.

திடீர் வெள்ளப்பெருக்கு

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. சிறிது நேரத்தில் கோம்பைத்தொழு மற்றும் மேகமலை வனப்பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது.

கனமழை பெய்ததால் சுதாரித்துக்கொண்ட மேகமலை வனத்துறையினர் விரைவாக அருவிக்கு சென்று, அங்கு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வேகமாக வெளியேறுமாறு அறிவுறுத்தனர். வனத்துறையினரின் அறிவுறுத்தலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் இருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.

சுற்றுலா பயணிகள் சென்ற சில நிமிடங்களில் அருவியில் நீர்வரத்து மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு சுற்றுலா பயணிகளை வெளியேற்றியதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

குளிக்க அனுமதி

இதற்கிடையே நேற்று காலை மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து, நீர்வரத்து சீரானது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இருப்பினும் மேகமலை வனப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் வனத்துறையினர் தொடர்ந்து அருவியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேகமலை அருவியில் நீர்வரத்து மிகவும் குறைந்ததால், அருவி வறண்டு விடும் என்ற கவலை இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் கனமழை பெய்து, அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இனி நீர்வரத்து தொடர்ச்சியாக இருக்கும். அதேபோல் இன்னும் ஓரிரு வாரங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளது. அப்போது மழை பெய்யும்பட்சத்தில் மேகமலை அருவியில் தொடர்ச்சியாக நீர்வரத்து இருக்கும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்