குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Update: 2023-07-26 20:00 GMT

பொள்ளாச்சி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

குரங்கு நீர்வீழ்ச்சி

ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியாறில் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் மூலம் நீர்வரத்து உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர்.

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் நீர்வரத்து இல்லாததால் நீர்வீழ்ச்சி மூடப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக மழையினால் நீர்வரத்து ஏற்பட்டதால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தடை

இந்த நிலையில் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமான வால்பாறை வனப்பகுதி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று காலை திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் நீர்வீழ்ச்சி வெறிச்சோடி காணப்பட்டது.

ஏமாற்றம்

மேலும் தடையை மீறி சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க நுழைவு வாயிலை மூடி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர் மழையின் காரணமாக பி.ஏ.பி. அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்