நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் நீரில் மூழ்கியது

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் நீரில் மூழ்கியது

Update: 2022-10-21 13:29 GMT

முத்தூர்,

நத்தக்காடையூர் அருகே மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புதுவெங்கரையாம்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

பலத்த மழை

நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் உள்ள தாழ்வான தரைப்பாலத்தை கடந்து நொய்யல் ஆறு செல்கிறது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் இந்த நொய்யல் ஆற்றின் தாழ்வான தரைப்பாலத்தின் வழியாக தாண்டாம்பாளையம், கந்தசாமிபாளையம், சிவகிரி, விளக்கேத்தி, எழுமாத்தூர், தாமரைப்பாளையம் உள்பட பல்வேறு நகர, கிராமங்களுக்கு தினந்தோறும் பல்வேறு கனரக, இருசக்கர வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை வனப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர் பலத்த மழை பெய்து வருகிறது.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இதனால் கடந்த 2 நாட்களாக நொய்யல் ஆற்றில் அதிக மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கோவையில் இருந்து நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் திருப்பூர் வழியாக வந்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு வந்து சேர்கிறது. நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் அப்படியே அதிக அளவில் மழை நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நேற்று காலை 10 மணி முதல் நொய்யல் ஆற்றில் மழைநீர் வெள்ளப்பெருக்கு திடீரென்று அதிக அளவில் வந்து ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி சீறி பாய்ந்து கரைபுரண்டு ஓடியது. இதனால் புதுவெங்கரையாம்பாளையம் கிராமம் அருகில் உள்ள நொய்யல் ஆற்றின் தாழ்வான தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் கனரக, இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

வெள்ள அபாய எச்சரிக்கை

நொய்யல் ஆற்றில் மழைநீர் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோர பகுதிகளில் இருபுறமும் வசித்து வரும் சுற்று வட்டார கிராம பொதுமக்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், நொய்யல் ஆற்றின் நீரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், நொய்யல் ஆற்றை எந்த வகையிலும் கடந்து செல்வதையும், உள்ளே இறங்கி குளிப்பதையும் முற்றிலும் அறவே தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

---

புதுவெங்கரையாம்பாளையம் நொய்யல் ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கியபடி மழைநீர் வெள்ளப்பெருக்கு உள்ளதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்