வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சென்னையை போலவே வெள்ள நிவாரண தொகை வழங்குவது ஏற்புடையதல்ல என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.
கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்த கனமழையால் வீடுகள் மற்றும் உடமைகளுடன் தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்து அம்மாவட்ட மக்கள் தவித்து வருகின்றனர்.
3 நாட்களுக்கு மேலாக குடியிருப்புகளுக்குள் தேங்கியிருக்கும் வெள்ள நீர் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகும் என பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்திருக்கும் ரூ.6000 நிவாரணத் தொகை, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.
சென்னையை ஒப்பிடும் போது மும்மடங்கு பெய்த மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சென்னையை போலவே வெள்ள நிவாரண தொகையும் வழங்குவது ஏற்புடையதல்ல.
எனவே, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கனமழையால், இழந்த வாழ்வாதாரத்தை மீட்பதற்கு தேவையான அளவிற்கு வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.