கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அய்யம்பேட்டை,
அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வெள்ளப்பெருக்கு
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெள்ளத்தில் கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆடுகள் அடித்து செல்லப்பட்டது. இந் நிலையில் வெள்ளம் பாதித்த கிராம பகுதிகளை நேற்று அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எச்சரிக்கை
பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், துணை தாசில்தார் பிரியா, ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதி, ரமேஷ் பாபு ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டு கிராம மக்களை எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொண்டனர். அப்போது வருவாய் ஆய்வாளர் சுகுணா, ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இளங்கோவன் ஆகியோர் இருந்தனர்.
அம்மாப்பேட்டை
அம்மாப்பேட்டை ஒன்றியம், களஞ்சேரி, இரும்புதலை ஊராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் வெண்ணாற்றின் கரையோர பகுதிகளில் வசித்து வரும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெண்ணாற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வெண்ணாற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, மீன்பிடிக்கவோ ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என்றும், தாழ்வான பகுதியில் குடியிருந்து வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி களஞ்சேரி ஊராட்சி தலைவர் கண்ணன், இரும்புதலை ஊராட்சி தலைவர் பாலாஜி ஆகியோர் சார்பில் பணியாளர்களை கொண்டு வாகனங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.