கனமழை எதிரொலி: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

5 மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-12 20:07 GMT

சென்னை,

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபி கடல் பகுதிகளில் செல்லக்கூடும்.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் ஆறு, ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 5 ஆயிரத்து 399 கன அடியில் இருந்து 8 ஆயிரத்து 900 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு நள்ளிரவில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்