குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
தென்காசியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;
தென்காசியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பலத்த மழை
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
தென்காசியில் மதியம் 1.30 மணியளவில் பெய்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையிலும் பலத்த மழை பெய்தது.
இதனால் குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் வெளியேறினர். அருவியில் சில கற்களும் விழுந்தன. அங்கு போலீசார் பாதுகாப்புக்கு இல்லாததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தனர். ஆபத்தை உணராமல் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். இதன்பிறகு போலீசார் அங்கு சென்று அவர்களை வெளியேற்றினர்.
இதேபோன்று மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ராமநதி, குண்டாறு அடவிநயினார் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.