ஆடிப்பூர தேரோட்ட விழா கொடியேற்றம்

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்ட விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update: 2023-07-14 19:13 GMT

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்ட விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழமையான கோவில்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்ற 61-வது தலமாகும்.

சிவபெருமான், அப்பர் பெருமானாகிய திருநாவுக்கரசருக்கு திருக்கட்டமுது அளித்து காட்சி அருளியதும், அதிகார வல்லவராகிய சிவபெருமான், எமதர்மனுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தையும் மீண்டும் வழங்கியதும், தேவலோக சப்த கன்னிகள் என்றும் அழியாத வரம் பெற்று கல்வாழைகளாக அவதரித்து ஆண், பெண் இருபாலரின் சகலதோஷங்களை நிவர்த்தி செய்து, எண்ணிய வரம் அளித்து அருள் புரிந்து வருவதுமான கி.பி. 6-ம் நூற்றாண்டை சார்ந்த பழமையான கோவில் ஆகும்.

கொடியேற்று விழா

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையொட்டி, காலை 12.10 மணிக்கு விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாள் கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 12.55 மணிக்கு துணியில் ரிஷப வாகனம் வரையப்பட்ட கொடியினை மேளதாளங்கள் முழங்க, கோவில் குருக்கள் கொடி மரத்தில் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு கேடயத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.இன்று (சனிக்கிழமை) இரவு சேஷ வாகனத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு கிளி வாகனத்திலும், 17-ந்தேதி இரவு காமதேனு வாகனத்திலும், 18-ந்தேதி ரிஷப வாகனத்திலும், 19-ந்தேதி அன்ன வாகனத்திலும், 20-ந்தேதி யாளி வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 21-ந்தேதி இரவு தங்ககுதிரை வாகனத்தில் சாமி எழுந்தருளுகிறார்.

22-ந்தேதி தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 23-ந்தேதி நடராஜர் புறப்பாடும், 24-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் லட்சுமணன் மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்