திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்
சித்திரை திருவிழாவையொட்டி
திருக்கடையூர்:
சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அமிர்தகடேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இந்த சிறப்பு பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் 14 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார்.
கொடியேற்றம்
பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் கோவில் நிர்வாகத்தினர், ஹரிகிருஷ்ணா குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் சாமிக்கு திருக்கல்யாணம், 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு காலசம்ஹார திருவிழா, மே 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், குருக்கள் செய்து வருகின்றனர்.