வேலை வாங்கித்தருவதாக மோசடி; கணவன்-மனைவி உள்பட 5 பேர் கைது

மயிலாடுதுறையில், வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-23 18:37 GMT

மயிலாடுதுறையில், வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவனம்

மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. அந்த நிறுவனம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் தனியார் நிறுவனங்களில் கால் சென்டர் பணி மற்றும் மேற்பார்வையாளர் பணி வாங்கித்தருவதாக அறிவித்ததை நம்பி 100-க்கும் மேற்பட்டோர் வேலை பெற வைப்பு கட்டணமாக தலா ரூ.3 ஆயிரம் செலுத்தியுள்ளனர்.ஆனால் 2 மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது, திரும்பி பணம் தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

சாலை மறியல்

இதை ெதாடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் நேற்று முன்தினம் அந்த தனியார் நிறுவனம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த 5 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில், தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக 100-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு பணத்தை திருப்பி தராமலும், வேலை வாங்கி தராமலும் மோசடி செய்தது தெரிய வந்தது.

கணவன்-மனைவி உள்பட 5 பேர் கைது

இதுதொடர்பாக குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த நித்யா(வயது 35) என்பவர், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இந்த புகாரின் பேரில் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் குச்சிபாளையத்தை சேர்ந்த நாராயணன் மகன் பிரபாகரன்(30) மற்றும் அவரது மனைவி பூவரசி(27), திருவாரூர் ராயபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த சுயம்பிரகாசம் மகன் சிங்காரவேலு(27), மயிலாடுதுறை அருகே உள்ள கிழாய் வெள்ளாள தெருவைச் சேர்ந்த திருமாவளவன் மகன் சித்தார்த்தன்(26), மணல்மேடு மேலத்தெருவை சேர்ந்த ரவி மகன் விக்னேஷ்(21) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்