871 ஆண்களுக்கு உடல்தகுதி தேர்வு

சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்ற 871 ஆண்களுக்கு உடல்தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது

Update: 2023-02-04 18:45 GMT

கள்ளக்குறிச்சி

சீருடைப்பணியாளர் பணி

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேர்வுப்பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்றது.

இத்தேர்வை தமிழகம் முழுவதும் 295 தேர்வு மையங்களில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் எழுதினர். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் அந்த தேர்வு வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த டிசம்பர் 26-ந் தேதி வெளியிடப்பட்டது.

1,061 பேர் தேர்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் 11 மையங்களில் நடைபெற்ற சீருடை பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை எழுத விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 15,670 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 13,547 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 2,123 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதன் தேர்ச்சி முடிவில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 871 ஆண்களும், 190 பெண்களும் என மொத்தம் 1,061 பேர் தேர்ச்சி பெற்றனர்.

உடல்தகுதித்தேர்வு

இதனை தொடர்ந்து இவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது. இத்தேர்வானது விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கி வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த உடல்தகுதி தேர்வுக்கு விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 871 ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை) இவர்களுக்கு உடல்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடக்கிறது. இதில் உயரம், மார்பளவு சரிபார்க்கப்பட்ட பின்னர் 1,500 மீட்டர் ஓட்டம் நடைபெறும்.

அடுத்தகட்ட தேர்வு

இதில் தகுதி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை உடற்திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் நடைபெறும். இத்தேர்வுகளில் தகுதி பெறுபவர்களுக்கு மருத்துவத்தேர்வு நடத்தப்படும்.

சீருடைப்பணியாளர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நடத்தப்படுவதையொட்டி போலீஸ் அதிகாரிகளுக்கு, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் ஆலோசனைக்கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்