நாகர்கோவில்:
திருவட்டார் அருகே உள்ள புத்தன்கடை பிலான்கன்று விளையை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது39), மீன் வியாபாரி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக திருவட்டார் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டின் அருகே பொக்லைன் எந்திர ஆபரேட்டர் அஜின் (25) வசித்து வருகிறார். இந்தநிலையில் லாரன்சின் மனைவிக்கும், அஜினுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து லாரன்சின் மனைவி கடந்த 4 மாதங்களாக தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு லாரன்ஸ் வாடகை வீட்டில் இருந்து பொருட்களை எடுக்க வந்தார். அப்போது அவரை அஜின் தடுத்து தகராறு செய்து கத்தியால் குத்தினார். இதில் அவரது இடது நெற்றியில் காயம் ஏற்பட்டது.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் விசாரணை மேற்கொண்டு ஆற்றூரில் பதுங்கி இருந்த அஜினை கைது செய்து பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்.