சுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும்

சுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என தரங்கம்பாடியில் நடந்த மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2022-07-05 17:50 GMT

பொறையாறு:

சுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என தரங்கம்பாடியில் நடந்த மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர்குப்பம், மேலமூவர்கரை, சாவடிகுப்பம், கீழமூவர்கரை, தொடுவாய், சின்னகொட்டாய்மேடு, கூழையார், பழையார், கொடியம்பாளையம் ஆகிய 19 மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சுருக்குமடி வலை

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலை, இரட்டை மடிவலை, அதிக குதிரை திறன் என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை கொண்டு மீன்பிடி தொழில் செய்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

தடை செய்யப்பட்டுள்ள வலைகள் மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிதொழிலில் ஈடுபட்டால் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தொடர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

மீன்பிடிக்க செல்லலாம்

மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்கள் அனைத்தும் இன்று(புதன்கிழமை) முதல் வழக்கம்போல மீன்பிடித் தொழிலுக்கு செல்லலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்