சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழா

சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழா நடந்தது

Update: 2023-06-17 18:45 GMT

சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் உள்ள வடக்கி ஊருணி சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஊருணியில் இருந்து 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நெல் அறுவடை பணிகள் முடிவுற்று கோடை காலத்தில் தண்ணீர் வற்றியது. அதனைத் தொடர்ந்து விவசாயம் செழிக்க வேண்டியும் மழை வரம் வேண்டியும் வடக்கி ஊருணியில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதற்காக காலை முதலே மேலப்பட்டி, ஒடுவன் பட்டி, முட்டாக்கட்டி, பிரான்மலை, வேங்கை பட்டி, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஊருணியில் கூடி, ஊத்தா, கச்சா, வலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் மீன்களை பிடிக்க தயாராக நின்று இருந்தார்கள். அதைத்தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் மீன்பிடி திருவிழாவை வெள்ளை வீசி ெதாடங்கி வைத்தனர். உடனே ஊருணி சுற்றி காத்திருந்த கிராம மக்கள் மீன்களை பிடிக்க ஊருணிக்குள் இறங்கினர். அவர்களிடம் விரால், சிலேபி, கெண்டை உள்ளிட்ட நாட்டுவகை மீன்கள் சிக்கின. அனைவருக்கும் போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு சென்று சமைத்து சாப்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்