கொட்டாம்பட்டி அருகே மீன்பிடி திருவிழா

கொட்டாம்பட்டி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்பிடித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-02-22 21:04 GMT

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்பிடித்து மகிழ்ந்தனர்.

மீன்பிடி திருவிழா

கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் நேற்று பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கடந்தாண்டு பெய்த பருவமழையால் நீண்ட வருடங்களுக்கு பிறகு கண்மாய்கள் நிரம்பின. தற்போது கோடை காலம் என்பதாலும், கண்மாய்களில் நீர் வற்றியதாலும் அங்கு மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மங்களாம்பட்டியில் உள்ள கோனார் கண்மாயில் மாசி சிவராத்திரி விழாவை தொடர்ந்து மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் அய்யாபட்டி, குன்னாரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாலை முதலே கண்மாய் கரையில் காத்திருந்தனர்.

மீன்குழம்பு

இதை தொடர்ந்து கிராம பெரியவர்கள் வந்து அருகில் உள்ள கருப்பு கோவிலில் பூஜை செய்து வணங்கி விட்டு வெள்ளை வீசி அனுமதி அளித்தனர். அப்போது அங்கு காத்திருந்த கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கண்மாய்க்குள் இறங்கி மீன்களை போட்டி போட்டு பிடிக்க தொடங்கினர்.

இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, கெளுத்தி, விரால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை பொதுமக்கள் பிடித்தனர். கண்மாயில் தண்ணீர் அதிகம் இருந்ததால் போதுமான அளவு மீன்கள் கிடைக்கவில்லை என்றாலும் தங்களுக்கு கிடைத்த மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து சென்றனர். மேலும் பிடிக்கப்பட்ட மீன்களை அவரவர் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து உண்டனர். இதன் காரணமாக மங்களாம்பட்டி சுற்று வட்டார பகுதியே மீன்குழம்பு வாசனையால் கமகமத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்