சிங்கம்புணரி அருகே-களை கட்டிய மீன்பிடி திருவிழா
சிங்கம்புணரி அருகே உள்ள தேனம்மாள்பட்டி ஊருணியில் மீன்பிடி திருவிழா நேற்று களை கட்டியது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே உள்ள தேனம்மாள்பட்டி ஊருணியில் மீன்பிடி திருவிழா நேற்று களை கட்டியது.
மீன்பிடி திருவிழா
சிங்கம்புணரி அருகே தேனம்மாள்பட்டி கிராமத்தில் உள்ள ஊருணியில் மழைக்காலத்தில் சேமிக்கப்பட்டதண்ணீரில் கிராம மக்கள் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தனர். படிப்படியாக நீர் வற்றி நீர்மட்டம் குறைந்ததால் ஊருணியில் உள்ள நாட்டு மற்றும் வளர்ப்பு மீன்களை பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கு ஊத்தா குத்து மீன்பிடித்திருவிழா நடைபெறுவதாக அறிவிப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே தேனம்மாள்பட்டியை சுற்றியுள்ள வையாபுரிபட்டி, பிரான்மலை, வேங்கைபட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஊத்தா கூடையுடன் வந்தனர்.
பல வகை மீன்கள் சிக்கின
கிராமத்து முக்கியஸ்தர்கள் ஊருணியின் கரையோரத்தில் நின்று வெள்ளைக் கொடி காட்டியவுடன் மீன்பிடிக்க அனுமதி கிடைத்த மகிழ்ச்சியோடு ஊத்தா கூடையுடன் ஓடி சென்று போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதனால் மீன்பிடி திருவிழா களை கட்டியது. இந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பலரும் விரா, கெழுத்தி, கட்லா, கெண்டை என பல வகை மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். அதிகம் கிடைக்காதவர்கள் அதிகம் கிடைத்தவருடன் பகிர்ந்து மீன்களைப் பெற்று மகிழ்ந்தனர். இதுபோன்ற மீன்பிடி திருவிழாவால் கிராம மக்களின் ஒற்றுமை பண்பாடு வளர வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.