தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் விசைப்படகு, இழுவைப்படகுகள் மீன்பிடிக்க தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் விசைப்படகு, இழுவைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துளளார்.

Update: 2023-04-13 18:45 GMT

கடலில் மீன்இனப்பெருக்க காலம் தொடங்குவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் விசைப்படகு, இழுவைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இனப்பெருக்கம்

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.

மீன்பிடிக்க தடை

எனவே, அரசாணையின்படி இந்த ஆண்டு நாளை (சனிக்கிழமை) முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க, செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லக்கூடாது.

இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.

இந்த தடை உத்தரவு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 540 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. அந்த காலகட்டத்தில் படகுகள், வலைகளில் ஏற்பட்டு உள்ள பழுதை சீரமைக்கும் பணிகளை மீனவர்கள் மேற்கொள்வார்கள். இதனால் மீன்களின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்