தஞ்சை மாவட்ட மீனவர்கள், கடலுக்கு செல்ல ஆயத்தம்

மீன்பிடி தடை காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாக உள்ளனர்.

Update: 2022-06-14 19:07 GMT

சேதுபாவாசத்திரம்:-

மீன்பிடி தடை காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாக உள்ளனர்.

மீன்பிடி தடை காலம்

மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த தடை காலத்தில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் இந்த ஆண்டும் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

உபகரணங்கள் சீரமைப்பு

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் 146 விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள். தடை காலம் என்பதால் கடந்த 2 மாதங்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

தடை காலத்தையொட்டி படகுகளை பராமரிப்பது, வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இன்று கடலுக்கு செல்கிறார்கள்

இந்த நிலையில் மீன்பிடி தடை காலம் நேற்று (ஜூன் 14-ந் தேதி) நள்ளிரவு நிறைவடைந்தது. இதனால் மீனவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் மேற்கொள்ள ஆயத்தமாக உள்ளனர். இதற்காக மீனவர்கள் கடந்த சில நாட்களாக விசைப்படகுகளை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது படகுகளில் டீசல் நிரப்புவது. தளவாட சாமான்களை தயாராக வைத்திருப்பது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் விசைப்படகு மீனவர்கள் மத்தியில் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்