மீனவர்கள் 10-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யத்தில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் 10-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.;

Update: 2023-05-15 19:15 GMT

வேதாரண்யத்தில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் 10-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

வேதாரண்யத்தில் சூறைக்காற்று

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருந்த மோகா புயல் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் கடந்த 9 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தற்போது புயல் கரையை கடந்து விட்ட நிலையில் வேதாரண்யம் பகுதியில் நேற்று சூறைக்காற்று வீசியது. இதனால் மீனவர்கள் நேற்று 10-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

எச்சரிக்கை

முன்னதாக புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. அந்த எச்சரிக்கையும் திரும்ப பெறப்படவில்லை.

வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 10 நாட்களாக மீன்பிடிக்க செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவிக்கிறார்கள். நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

மீன்வளத்துறை அறிவிப்பு

மோகா புயல் மியான்மார் நாட்டில் கரையை கடந்து விட்ட நிலையில் வேதாரண்யம் பகுதியில் காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. மீன்வளத்துறை அறிவிப்பு வந்தபிறகு மீன்பிடிக்க செல்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

ஓரிரு நாட்களில் மீன்வளத்துறை அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில், மீனவர்கள் தங்கள் வலைகள், படகுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்