கலெக்டர் அலுவலகத்தில் மீன்தொழிலாளர் சங்கத்தினர் மனு
விடுபட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மீன் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்
நாகர்கோவில்,
விடுபட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மீன் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
கோரிக்கைகளை எடுத்துரைப்பார்கள்
குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் மாதத்திற்கு ஒருமுறை மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதன்மூலம் மீனவர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துரைப்பார்கள். தற்போது சில காரணங்களை கூறி மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தாமல் உள்ளது. இதனால் மீனவர்களின் பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, மீனவர்களின் நலன் கருதி காலம் தாழ்த்தாமல் உடனே மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும்.
சாலைகளை சீரமைக்க வேண்டும்
மத்திய அரசின் ஆழ்கடல் விசைப்படகு வழங்கும் திட்டத்தில் மீனவர்களுக்கு விசைப்படகுகள் வழங்கவும், மீன்பிடி விசைப்படகு துறைமுகங்களை விரிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
மீனவ கிராமங்களில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். இனயம் ஹெலன்நகரில் இருந்து கீழ்மிடாலம் வரை செல்லும் பீச் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலை பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.