வைகை அணையில் மீன்பிடி நிறுத்தப்பட்டதால் வருவாய் இன்றி தவிக்கும் மீனவர்கள்

வைகை அணையில் ஒருமாதமாக மீன்பிடி நிறுத்தப்பட்டுள்ளதால் வருவாய் இன்றி மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2023-04-08 20:30 GMT

வைகை அணையில் ஒருமாதமாக மீன்பிடி நிறுத்தப்பட்டுள்ளதால் வருவாய் இன்றி மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

வைகை அணை

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. மீனவர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மீனவர்கள் மூலம் இங்கு மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தது. அவ்வாறு பிடிக்கப்படும் மீன்களில் பாதி மீனவர்களுக்கும், பாதி மீன்வளத்துறைக்கும் வழங்கப்பட்டு, பொது மக்களுக்கு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையே வைகை அணையில் மீன்பிடிக்கும் உரிமையை தனியாருக்கு வழங்க மீன்வளத்துறை முடிவு செய்து, கடந்த மாதம் ஏலத்தை நடத்தியது. அப்போது கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் மீன்பிடி உரிமத்தை ரூ.82 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. மேலும் மீன்பிடி உரிமை தனியாருக்கு மாறினாலும், மீனவர்கள் விஷயத்தில் பழைய நடைமுறையே தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீன்பிடி நிறுத்தம்

இந்தநிலையில் தனியார் நிறுவனம், வைகை அணையில் மீனவர்கள் பிடிக்கும் கட்லா, மிருகால், ரோகு வகை மீன்களுக்கு கிலோவுக்கு ரூ.30-ம், ஜிலேபி ரக மீன்களுக்கு ரூ.35-ம் கூலியாக நிர்ணயம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் மீன்பிடி தொழிலில் பழைய நடைமுறையை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கூலி நிர்ணயம் தொடர்பாக மீனவர்களிடம், மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக மீன்பிடி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் மீன்பிடி பரிசல்கள் வைகை அணை பகுதியில் ஓய்வெடுக்கின்றன.

இதுகுறித்து வைகை அணையை சேர்ந்த மீனவர் பாலாஜி கூறுகையில், கூலி விஷயத்தில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. ஆனால் தற்போது மீன்பிடி தனியார் வசம் சென்றதால், மீனவர்களுக்கான கூலியை குறைத்துள்ளனர். அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒருமாதமாக மீன்பிடியை நிறுத்திவைத்துள்ளனர். இதனால் நாங்கள் வருவாய் இன்றி குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே கூலிப்பிரச்சினை தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்