நாகூர் பட்டினச்சேரியில் அடிக்கடி கடல் நீர் உட்புகுவதால் மீனவர்கள் வேதனை

நாகூர் பட்டினச்சேரியில் அடிக்கடி கடல் நீர் உட்புகுவதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். விரைவில் அலை தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-10 18:45 GMT

நாகூர் பட்டினச்சேரியில் அடிக்கடி கடல் நீர் உட்புகுவதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். விரைவில் அலை தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரிடரால் பாதிக்கப்படும் மாவட்டம்

சுனாமி, புயல், மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக நாகை உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலை நாகை மாவட்டத்திற்கு ஆறாத வடுவை உண்டாக்கியது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலும் நாகை மாவட்டத்தை புரட்டி போட்டு பேரழிவை ஏற்படுத்தியது.

கடல்நீர் உட்புகுந்து வருகிறது

இயற்கை பேரிடரில் முதலில் பாதிக்கப்படுவது மீனவ கிராமங்களாகவே இருந்து வருகிறது. இயற்கையோடு போராடிவரும் மீனவர்களின் குடியிருப்புகளை பாதுகாக்கும் கேடயமாக அலைத்தடுப்பு சுவர்கள் உள்ளன. இந்த தடுப்புச்சுவர் இல்லாத மீனவ கிராமங்கள் அலை சிற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம், புயல், மழை, வெள்ள காலங்களில் கடல் நீர் உட்புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடற்கரையோரம் உள்ள ஏராளமான வீடுகள் இடிந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும், கால்நடைகள் கடலில் அடித்து செல்லப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் என்ற பாடல் வரிகள் போல நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கண்ணீர் மல்க கோரிக்கை...

சுனாமி, கஜா புயலைத் தொடர்ந்து தற்போதுள்ள மாண்டஸ் புயலால் இந்த மீனவர் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடல் சீற்றத்தில் இருந்து காப்பாற்ற பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் அலைத்தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என அங்குள்ள மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பட்டினச்சேரியை சேர்ந்த மீனவர் தன்ராஜ் கூறுகையில்,

சுனாமிக்கு பிறகு, பட்டினச்சேரி மீனவ கிராமம் தொடர்ந்து கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடல் வழக்கத்தை விட 500 மீட்டர் கரைப்பகுதிக்கு வந்து உள்ளது.

நிம்மதியாக வீட்டில் தூங்க முடியவில்லை

மழை, புயல் காலங்களில் கடல் நீர் குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. இதனால் கடலில் தொழில் செய்துவிட்டு, மீனவர்கள் நிம்மதியாக வீட்டில் படுத்து தூங்க முடியவில்லை. வீடு இடிந்து விடுமோ என்கிற அச்சத்துடனேயே இருக்க வேண்டி உள்ளது. கடற்கரையோரத்தில் இருந்த வீடுகள், மரங்கள் அனைத்தும் விழுந்துவிட்டது. துயரத்தில் தொழில் செய்யும் மீனவர்களை, மேலும் துயரத்துக்குள் தள்ளாமல் அரசு காப்பாற்ற வேண்டும். நாகூர் பட்டினச்சேரியில் விரைவில் அலைத்தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்றார்.

அப்பகுதியை சேர்ந்த மீனவர் நாகரத்தினம்:-நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் கடல் சீற்றத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் சொல்ல முடியாத துயரத்தை சந்தித்து வருகின்றனர். பட்டினச்சேரி கடற்கரையோரம் அலைத்தடுப்பு சுவரை கட்டினால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர், நாகை கலெக்டர், மீன் வளர்ச்சி கழக தலைவர், எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த திவ்யா:-மீன்பிடிதொழிலை விட்டால் வேறு தொழில் எங்களுக்கு தெரியாது. புயல் வீசும் போதெல்லாம் வீட்டை பூட்டிவிட்டு, முகாமுக்கு சென்று விடுகிறோம். வந்து பார்த்தால் அலை அனைத்தையும் சுருட்டிக் கொண்டு சென்று விடுகிறது. இந்த பகுதியை விட்டால் வேறு வாழ்விடம் கிடையாது. வெளியில் இடம் வாங்கி வீடு கட்டுவதற்கும், எங்களுக்கு வசதியும் கிடையாது. அரசு காலம் தாழ்த்தாமல் பட்டினச்சேரியில் விரைவில் அலை தடுப்பு சுவர் கட்டித் தர வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்