காயவைத்த கருவாடுகள் நனைந்ததால் மீனவர்கள் வேதனை

நாகையில் பெய்த திடீர் மழையில் காயவைத்த கருவாடு நனைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2023-05-02 18:45 GMT


நாகையில் பெய்த திடீர் மழையில் காயவைத்த கருவாடு நனைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம்

நாகை மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளங்கள் உள்ளன. இங்கு குடிசைகளை அமைத்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கருவாடு காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெத்திலி, வாளை, கிழங்காமீன், ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, திருக்கை, வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கருவாடுகள் தயாரிக்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் கருவாடு, திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், வேலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு மொத்தமாக அனுப்பி வைக்கப்படுகிறது. மீன்பிடி துறைமுக கருவாடு காயவைக்கும் தளத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரையிலான அளவிற்கு கருவாடுகள் தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும்.

திடீர் மழை

நாகையில் தயாரிக்கப்படும் கருவாட்டுக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. கருவாடு தயாரிப்பதற்கு வெயில் காலமே பொற்காலமாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த கோடை வெயிலில் கருவாடு உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை நாகையில் திடீரென கன மழை பெய்தது. இந்த மழையால் நாகையில் காய வைக்கப்பட்டுள்ள கருவாடுகள் நனைந்தன. மேலும் முன்னேற்பாடாக தார்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்ட கருவாடுகளுக்குள்ளும் மழை நீர் சென்றதால் அவைகளும் நனைந்தன.

மீனவர்கள் வேதனை

இதனால் வேதனை அடைந்த மீனவர்கள் நனைந்த கருவாடுகளை சிரமத்துடன் தற்போது தென்பட்ட லேசான வெயிலில் மீண்டும் காய வைத்தனர்.

இதனால் கருவாட்டின் தரம் குறைந்து விடும் என்றும், பாதி விலைக்கு தான் கருவாடு விலை போகும் என்றும், அதிகளவில் நஷ்டம் ஏற்படும் என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்