மீனவர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி மீன்பிடித் தொழிலைச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2023-10-29 16:52 GMT

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களைக் கைது செய்திருப்பதோடு அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் கண்டனத்திற்குரியது.

இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், தற்போது மேலும் 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

ஆகவே, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை உணர்ந்து, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, மீனவர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி மீன்பிடித் தொழிலைச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்