2-வது நாளாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

உவரி அருகே தூண்டில் வளைவு அமைக்கக்கோரி 2-வது நாளாக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2023-03-12 19:13 GMT

திசையன்விளை:

உவரி அருகே தூண்டில் வளைவு அமைக்கக்கோரி 2-வது நாளாக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழை கிராமத்தில் கடந்த 10-ந்தேதி மாலையில் கடல் அரிப்பால் 30 மீட்டர் தூரம் வரையிலும் ஊருக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. மேலும் கடற்கரையில் நாட்டுப்படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே அங்கு தூண்டில் வளைவு அமைக்கக்கோரி நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக கூடுதாழை கடற்கரையில் மீனவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் பேச்சுவார்த்தை

கூடுதாழை பங்குத்தந்தை வில்லியம் தலைமை தாங்கினார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பாரதீய மீனவர் சங்க தலைவர் லூர்துராஜ், குட்டம் பஞ்சாயத்து தலைவர் சற்குணராஜ், உவரி பஞ்சாயத்து முன்னாள் தலைவர்கள் ரைமண்ட், அந்தோணி, போராட்டக்குழு தலைவர் ரோசிங்டன் மற்றும் கூட்டப்புளி, இடிந்தகரை பங்குத்தந்தைகள், பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே சபாநாயகர் அப்பாவு கூடுதாழையில் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பட்ஜெட் கூட்டத்தொடர்

உங்களில் ஒருவராக இங்கு வந்துள்ளேன். வருகிற 20-ந்தேதி தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. எனவே மீனவ பிரதிநிதிகளுடன் சென்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து, கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான தேவையை எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேவைப்பட்டால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

எனினும் கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கும் வரையிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்