கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல ஆயத்தமாகும் மீனவர்கள்

இன்றுடன் மீன்பிடி தடைகாலம் நிறைவு பெறும், நிலையில் கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீனவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்;

Update: 2023-06-13 18:45 GMT

கடலூர் முதுநகர்

மீன்பிடி தடைகாலம்

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரைக்கும், 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான தடைகாலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதன் மூலம் மீனவர்கள் துறைமுக பகுதிகளில் இருந்து இன்று நள்ளிரவுக்கு பின்னர் மீன்பிடிக்க செல்ல இருக்கிறார்கள்.

அந்த வகையில், கடலூர் துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், தங்களது படகுகளை துறைமுக பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர்.

தயாராகும் மீனவர்கள்

தடைகாலத்தை பயன்படுத்தி, படகுகளுக்கு வர்ணம் தீட்டுதல், வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். இன்றுடன் தடைகாலம் நிறைவு பெறுவதால், துறைமுக பகுதி மீனவர்கள், ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவதற்காக தங்களை முழுவீச்சில் தயார் செய்து வருகிறார்கள்.

இதில், படகுகளில், வலைகளை ஏற்றி வைப்பது, ஐஸ் கட்டிகளை ஏற்றுவது போன்ற ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதோடு கடந்த 60 நாட்களுக்கு மேலாக, வெறிச்சோடி காணப்பட்ட மீன்பிடி தளமும், தற்போது மெல்ல சுறுசுறுப்புடன் இயல்பு நிலைக்கு இயங்க தொடங்கி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்