நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த மீனவர்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் கடலூரில் நடந்த கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் பேச்சு

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த மீனவர்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கடலூரில் நடந்த கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப்மிட்டல் கூறினார்.

Update: 2023-07-18 18:45 GMT

தமிழ்நாடு காவல்துறை கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்கள் ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் டி.ஜி.பி. டாக்டர் சந்தீப் மிட்டல் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மீனவ கிராமங்களின் பிரச்சினை, மீனவர் பிரச்சினை குறித்தும் மீனவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

படகுகளை மீட்க வேண்டும்

அப்போது மீனவர்கள் சிலர் கூறுகையில், கடலில் மீன்பிடிக்க செல்லும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படுகிறது. இது பற்றி அறிந்ததும் எங்களை கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். ஆனால் விபத்துக்குள்ளான படகை மீட்க நடவடிக்கை எடுப்பதில்லை. ஆகவே வருங்காலங்களில் கடலில் சேதமடையும் அல்லது விபத்துக்குள்ளாகும் படகுகளையும் மீட்க வேண்டும். கோட்டக்குப்பத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதை கேட்ட கூடுதல் டி.ஜி.பி., இது பற்றி அரசிடம் எடுத்து கூறி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். தமிழ்நாடு காவல்துறை சார்பில் மீனவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்து வருவதாகவும், மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திறன் மேம்பாட்டு பயிற்சி காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இணைந்து செயல்பட வேண்டும்

மேலும் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த மீனவர்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஏதேனும் சட்டவிரோத செயல்களை பற்றி தகவல் தெரிந்தவுடன் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்துத்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய கூடுதல் டி.ஜி.பி. டாக்டர் சந்தீப் மிட்டல், அனைத்து அரசு துறையினரும் இணைந்து செயல்பட்டால் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்றார்.

கூட்டத்தில் மீன்வளத்துறை இணை இயக்குனர் வேல்முருகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், ஸ்ரீதரன் (விழுப்புரம்), துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, சுரேஷ்கண்ணன் (கியூ பிரிவு), போலீஸ் சூப்பிரண்டு (புதுச்சேரி மரைன்) பழனிவேல், சுங்கத்துறை கண்காணிப்பாளர் சையத் குமார், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, வனத்துறை அதிகாரி பாரதிதாசன், கடல் அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா, சந்திரன் (விழுப்புரம்), துறைமுக அதிகாரி கார்த்திகேயன், தமிழ்நாடு கடல் சார் வாரியம் பாபு மற்றும் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மாநில மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்