கடலுக்கு செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கக் கூடாது
தடைக்காலம் முடிவடைந்ததால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கக்கூடாது என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:
தடைக்காலம் முடிவடைந்ததால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கக்கூடாது என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீன்பிடி தடைக்காலம்
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தில் மீன்இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும்.
இந்த தடைக்காலத்தில் பைபர் படகை தவிர, விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
அனுமதி சீட்டு
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று (புதன்கிழமை) முடிவடைகிறது. இதையடுத்து மீன்பிடி விசைப்படகில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் விவரங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்ற பிறகே கடலுக்கு செல்ல வேண்டும்.
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது உயிர்காக்கும் கவச உடைகள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும்.
எல்லை தாண்டக் கூடாது
மீனவர்கள், இந்திய சர்வதேச எல்லைக்கோட்டினை தாண்டி மீன்பிடிக்க கூடாது. தடை செய்யப்பட்ட இரட்டைமடி மற்றும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்ககூடாது.தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி மீன்பிடிதொழில் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.