கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.;
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, சிறு தலைக்காடு, பெரியகுத்தகை, வானவன்மகாதேவி, அண்ணாபேட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் காற்று வீசி வருவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
மேலும் வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் நேற்று மேற்கண்ட பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
சேறும், சகதியுமாக...
ஆறுகாட்டுத்துறை பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரம் கடல் நீர் உள்வாங்கியதால் கடற்கரை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. கடற்கரை பகுதியில் சேறு அதிக அளவில் இருப்பதாலும், காற்றின் காரணமாகவும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.