கரையில் ஒதுங்கிய மீன்களை தூண்டில் போட்டு பிடித்த மீனவர்கள்

கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கியதால் ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கின. அவற்றை மீனவர்கள் தூண்டில் போட்டு பிடித்தனர்.

Update: 2022-10-21 18:45 GMT

கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கியதால் ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கின. அவற்றை மீனவர்கள் தூண்டில் போட்டு பிடித்தனர்.

இயற்கை மாற்றம்

கன்னியாகுமரி கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் அமாவாசை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வர உள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி கடல் திடீரென உள்வாங்கியது.

இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் மீனவர்கள் எந்தவித அச்சமுமின்றி வழக்கம் போல் கடலுக்குள் சென்று மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பினர்.

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி இருந்ததால் ஏராளமான மீன்கள் உயிருடன் கரையில் ஒதுங்கின.

தூண்டில் போட்டு பிடித்தனர்

பாறைகளுக்கு இடையே உயிருடன் போராடிக் கொண்டிருந்த மீன்களை மீனவர்கள் தூண்டில் போட்டு பிடித்தனர். அதை சுற்றுலா பயணிகள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.

கன்னியாகுமரியில் நேற்று காலையில் வங்கக்கடல் பகுதியில் கடல் இயல்பு நிலையில் காணப்பட்டது. இதனால் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து நடந்தது.

சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.

அதேசமயம் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து கடலில் இறங்கி குளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்