வலைகள், பரிசல்கள் வாங்க மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்

உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீன்பிடி வலைகள் மற்றும் பரிசல்கள் 50 சதவீத மானியத்தில் பெற விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசிநாள் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

Update: 2023-08-30 18:45 GMT

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீன்பிடி வலைகள்

தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையில் உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடி திறனை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயினை பெருக்கிட ஏதுவாக, உள்நாட்டு மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி உபகரணங்களான வலைகள் மற்றும் பரிசல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மீன்பிடி வலைகள் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் மற்றும் மீன்பிடி பரிசல் அலகு ஒன்றிற்கான விலை ரூ.20 ஆயிரத்தில் 50 சதவீத மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் வாயிலாக ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்குள் வலை மற்றும் பரிசல்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வாங்கும் வலை மற்றும் பரிசல்கள் உரிய ஆய்வுக்கு பின்னரே மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இன்று கடைசிநாள்

எனவே மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீன்வள ஆய்வாளர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வள ஆய்வாளர் மற்றும் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை இன்று (வியாழக்கிழமை) மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்