கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்

மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டதாக புகார் தெரிவித்த மீனவர்கள் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-03 18:45 GMT


மதம் மாறியதால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டதாக புகார் தெரிவித்த மீனவர்கள் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் புகார்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்த 7 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் வக்கீல் சரவணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வேறு மதத்துக்கு மாறியதால் தாங்கள் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளோம். கடலுக்கு மீன்பிடிக்க சென்று மீன்களை எடுத்து வந்தால் அதனை வியாபாரிகள் வாங்க கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஊர் கட்டுப்பாட்டை மீறி எங்களுக்கு யாராவது உதவிசெய்தால் அவர்களுக்கும் அபராதம் விதிப்பது, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது என்று மிரட்டி வருகின்றனர். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே 7 குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கிவைத்து துன்புறுத்தி வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காத்திருப்பு போராட்டம்

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மகாபாரதி, பூம்புகார் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வரும்வரை காத்திருக்க கூறினார். இதனையடுத்து வெளியே வந்த மீனவ குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வந்தவர்கள் என்று 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்