கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் சிரமம்

முகப்பு துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2023-08-22 18:45 GMT

கொள்ளிடம்:

முகப்பு துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மணல் திட்டுகள்

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் 100 விசைப்படகுகள் 300 நாட்டு படகுகளை பயன்படுத்தி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். தற்பொழுது திருமுல்லைவாசல் உப்பனாற்றில் தண்ணீர் இல்லாததால் கடல் முகப்பு துவாரம் தூர்ந்து போய் மணல் திட்டுகளால் மூடிய நிலையில் உள்ளது. இதனால் திருமுல்லைவாசல் தொடுவாய், கூழையாறு, சின்ன கொட்டாய் மேடு, உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும் கடந்த சில மாதமாக மூடிய நிலையில் உள்ள மணல் திட்டுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் விசைப்படகுகளை கடந்த ஒரு மாத காலமாக திருமுல்லைவாசல் உப்பனாற்றில் நிறுத்தி வைத்துள்ளனர்.

தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்

இதுகுறித்து திருமுல்லைவாசல் கிராம தலைவர் பாண்டியன் கூறியதாவது, திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகம் இயற்கை துறைமுகமாக அமைந்துள்ளது. கடலை ஒட்டிய பகுதியில் உப்பணாறு செல்வதால் இப்பகுதி மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிப்பதற்கு ஏதுவாக இந்த துறைமுகம் அமைந்துள்ளது. திருமுல்லைவாசல் துறைமுகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினந்தோறும் சென்று வந்த நிலையில் தற்பொழுது திருமுல்லைவாசல் உப்பனாற்றுக்கும் கடல் பகுதிக்கும் இடையில் மணல் திட்டு்கள் அதிகளவில் காணப்படுகிறது.

இதனால் ஆற்றுக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மணல் திட்டுகள் மேலும் அதிகரித்து காணப்பட்டதால் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் உப்பனாற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் திருமுல்லைவாசல் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே இது குறித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு திருமுல்லைவாசல் கடல்பகுதியில் உள்ள கடல் முகப்பு துவாரத்தை ஆழப்படுத்தி அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்