4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்று திரும்பிய பாம்பன் மீனவர்கள்

4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்று பாம்பன் மீனவர்கள் திரும்பினர்.

Update: 2023-01-18 18:45 GMT

ராமேசுவரம், 

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களாக பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்தநிலையில், பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் அதிகமான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடாவுக்கு மீன் பிடிக்க சென்றனர். சீலா, மாவுலா, முரல், பாறை உள்ளிட்ட பலவகை மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினார்கள். 4 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்று வந்த மீனவர்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கூறும் போது, "கடந்த 2 மாதமாக அய்யப்ப பக்தர்கள் சீசன் இருந்து வந்ததால் அனைத்து வகை மீன்களுமே விலை குறைவாகவே விற்பனையானது. தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் முடிந்துவிட்டதால் மீன்கள் சற்று விலை உயர்ந்தது. ஆனால், எதிர்பார்த்த விலை கிடைத்தது என்று சொல்ல முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாவுலா 1 கிலோ ரூ. 250-ல் இருந்து ரூ. 330 ஆக விற்பனையானது. முரல் ரூ. 270-லிருந்து ரூ. 330 ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கண்ணி பாறை ரூ.70-ல் இருந்து ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. விளை மீன் ரூ.270-ல் இருந்து ரூ.330-ஆக உயர்ந்துள்ளது. அய்யப்ப பக்தர்கள் சீசன் முடிவடைந்து 5 நாட்களே ஆகியுள்ளதால் இன்னும் மீன்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவே மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்