முதலை கடித்து மீன்பிடி தொழிலாளி படுகாயம்

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து மீன்பிடி தொழிலாளி படுகாயமடைந்தார்

Update: 2023-06-25 19:53 GMT

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து மீன்பிடி தொழிலாளி படுகாயமடைந்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன்பிடி தொழிலாளி

தஞ்சை மாவட்டம கும்பகோணம் அருகே அணைக்கரை மீனவ தெருவை சேர்ந்தவர் ரவி (வயது55). மீன்பிடி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் உள்ள மதகு கட்டையில் உட்கார்ந்து தனது மீன்பிடி வலையின் மூலம் மீன்பிடித்து கொண்டிருந்தார்.

முதலை கடித்தது

அப்போது திடீரென கொள்ளிடம் ஆற்றில் கிடந்த முதலை ரவியின் கால்களை கவ்வி கடித்து தண்ணீரில் இழுத்து சென்றது. அப்போது ரவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்து ரவியை முதலையிடம் இருந்து மீட்டனர்.

விசாரணை

இதில் பலத்த காயம் அடைந்த ரவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்