இறால், சிலங்கன் உள்ளிட்ட மீன்கள், நண்டுகள் அதிகளவில் கிடைத்தன

தடைகாலம் முடிந்ததையடுத்து விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பினர். அவர்களது வலையில் இறால், சிலங்கன் உள்ளிட்ட மீன்கள் மற்றும் நண்டுகள் அதிகளவில் கிடைத்தன. மீன்களுக்கு போதிய விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Update: 2022-06-16 18:33 GMT

மீன்பிடி தடைகாலம்

மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்ரல் 15 முதல் ஜூன் 15-ந்தேதி வரை 61 நாட்கள் விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறையினரால் தடைவிதிக்கப்பட்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்த தடைகாலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் ஏற்றி படகுகளில் உள்ள சிறிய, சிறிய பழுதுகளை சரி செய்தனர். மீன்வலைகளை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும் மீன்பிடி தடைகாலத்தில் இப்பகுதில் உள்ள அனைத்து மீன் மார்க்கெட்டிலும் மீன்களின் விலை இரட்டிப்பாக அதிகரித்தது. மீன்பிடி சார்ந்த தொழில்களும் முடங்கின.

இறால், நண்டுகள் அதிகளவில் கிடைத்தன

இந்தநிலையில் நேற்று முன்தினத்தோடு மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலையிலேயே தங்கள் படகுகளில் டீசல், ஐஸ் கட்டிகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை எடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

இதையடுத்து மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு நேற்று கரைக்கு திரும்பினர். அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தது போலவே மீனவர்கள் வலையில் இறால், கணவாய், வாவல், பாறை, சிலங்கன், நகரை, காரல் உள்ளிட்ட மீன்களை அதிக அளவில் பிடித்து வந்தனர். ஏராளமான நண்டுகளும் கிடைத்தன. இதையடுத்து ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் காத்திருந்த மீனவர்களின் குடும்பத்தினர், அவரது உறவினர்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் அவர்களை மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை படகில் இருந்து இறக்கி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது மீன்களை வாங்குவதற்கு அங்கு குவிந்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டனர்.

மீனவர்கள் ஏமாற்றம்

முன்னதாக பிடித்துவரப்பட்ட மீன்களை வாங்கி செல்ல இரவிலிருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இப்பகுதியில் அதிகளவில் குவிந்திருந்தனர். இதேபோல் ஆந்திரா, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இதையடுத்து மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை அதிகளவில் விலைக்கு வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

தடை காலத்திற்கு முன்பு ஒரு கிலோ நண்டு ரூ.700-க்கு விற்றது. ஆனால் தற்போது ரூ.300-க்கு தான் விலைபோனது. இதேபோல் ஒரு கிலோ இறால் ரூ.550-க்கு விலை போனது. ஆனால் தற்போது ரூ.400-க்கு மட்டுமே விலை போனது. அதிகளவில் வலைகளில் மீன்கள், நண்டுகள் கிடைத்தாலும் அதற்கு போதிய விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்