பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே மேட்டுப்பாளையம் குளத்தில் வெயிலின் தாக்கத்தால் மீன்கள் செத்து மிதக்கின்றன.
கோடை காலம்
பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அந்த குளம் நிரம்பி கடல் போல் காட்சியளித்தது. இதன் காரணமாக குளத்தில் அதிகளவு மீன்கள் உற்பத்தியாகின. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குளத்தில் தண்ணீர் குறைய தொடங்கி உள்ளது. இதனால் குளத்தில் ஆங்காங்கே தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.
செத்து மிதக்கும் மீன்கள்
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் காரணமாக குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. வெயிலின் உஷ்ணத்தால் தண்ணீர் சூடேறி, அதனால் மீன்கள் செத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது.
எனவே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், குளத்தில் உயிருடன் உள்ள மீன்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.