இறால் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்யாததால் மீனவர்கள் ஏமாற்றம்

எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் இறால் மீன்கள் பிடிபட்டாலும், ஏற்றுமதி நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யாததால் ராமேசுவரம் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே இதுதொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-06-16 15:57 GMT

ராமேசுவரம், 

எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் இறால் மீன்கள் பிடிபட்டாலும், ஏற்றுமதி நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யாததால் ராமேசுவரம் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே இதுதொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்தனர்.

ராமேசுவரம் மீனவர்கள்

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை மீன்கள் இனப்பெருக்க சீசன் காலமாக உள்ளதால் இந்த 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் மீன்பிடி தடைக்காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

தடைக்காலம் கடந்த 14-ந் தேதி நள்ளிரவுடன் முடிந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவற்றில் சில படகுகள் நேற்று முன்தினம் கரை திரும்பின.

அதிகம் பிடிபட்ட இறால்கள்

மற்ற பெரும்பாலான படகுகள் நேற்று காலை கரை திரும்பின. இறால், நண்டு, கணவாய், சங்காயம், திருக்கை உள்ளிட்ட பலவகை மீன்கள் பிடிபட்டு இருந்தன.

கரை திரும்பிய ஒவ்வொரு படகிலும் சராசரியாக 400 கிலோவில் இருந்து 600 கிலோ வரையிலும் இறால் மீன்கள் கிடைத்துள்ளன. மேலும் ஒவ்வொரு படகிலும் நண்டு, கணவாய், மீன்கள் 50-லிருந்து 100 கிலோ வரையிலும் சங்காயம், காரல் மீன்கள் 300-லிருந்து 500 கிலோ வரையிலும் பிடிபட்டு இருந்தன.

இறால் மீன்கள் அதிக அளவு வௌிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. எனவே இறால் அதிகம் பிடிபட்டதால் மீனவர்கள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், இறால் மீன்களுக்கு ஏற்றுமதி நிறுவனத்தினர் இது வரையிலும் சரியான விலை நிர்ணயம் செய்யாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

மண்டபம்

இதேபோல் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகு ஒவ்வொன்றிலும் சராசரியாக 500 கிலோ வரையிலும் இறால் மீன்கள் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. சாயல்குடி அருகே மூக்கையூர் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகளில் இறால் மீன்கள் 800 கிலோ வரையிலும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசுராஜா கூறியதாவது:-

மீனவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட இறால், கணவாய் உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் கிடைத்து உள்ளன. இறால் மீன்களுக்கு இதுவரை ஏற்றுமதி நிறுவனத்தினர் சரியானவிலை நிர்ணயம் செய்யவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து பொருட்களுமே விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஐஸ்கட்டி பார் ஒன்று ரூ.100-க்கு விலை இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.200 ஆக உயர்ந்து உள்ளது. டீசல் விலை உயர்ந்து உள்ளது. கடலுக்கு சென்று வந்த மீனவர்களுக்கு சம்பளம், சாப்பாடு உள்ளிட்ட இதர செலவுகளை சேர்த்தால், இறால் மீன்களுக்கு நல்ல விலை இருந்தால் மட்டுமே லாபம் கிடைக்கும்.

இறால் மீனுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை என்றால் அதிக அளவில் பிடித்து வந்தும் பயன் இல்லை. எனவே இதுகுறித்து ஏற்றுமதி நிறுவனத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இறால் மீன்களுக்கு தகுந்த விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவர்களின் கோரிக்கையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

களைகட்டிய துறைமுகம்

விசைப்படகு மீனவர்கள் சுமார் 2 மாதங்களுக்கு பின்பு கடலுக்கு சென்று திரும்பியதால் ராமேசுவரம் துறைமுகம் கடற்கரை பகுதி மீனவர்கள், வியாபாரிகளால் களைகட்டி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்