சென்னையில் ஜூலை 24 முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் முதற்கட்ட முகாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் ஜூலை 24 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் முதற்கட்ட முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் தகுதிவாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.1000 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, உரிமைத் தொகை பெறுவதற்கான நெறிமுறைகள் உள்ளிட்டவை பற்றி அறிவிப்பு வெளியானது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வழங்கப்படும். தன்னார்வலர்கள் வசிக்கும் பகுதிக்கு 2 கிலோ மீட்டாருக்கு மிகாமல் அவர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் 2 கட்டங்களாக விண்ணப்ப முகாம்கள் நடத்தப்படும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் -5 ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறும். உரிமைத் தொகை விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வர தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்ப பதிவு நடைபெறும் நாள், நேரத்தை குறிப்பிட்டு விண்ணப்பம், டோக்கன் ஆகியவற்றை ரேஷன்கடை பணியாளர் வழங்குவர். ரேஷன் கடை பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாள், நேரத்தில் விண்ணப்பதாரர் எடுத்து வரவேண்டும். விண்ணப்பப் பதிவின்போது சரிபார்ப்புக்காக ஆதார் எண் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் வர வேண்டும். குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது ஆகியவற்றையும் சரிபார்ப்புக்காக எடுத்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.