மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உரிமையை நிலைநாட்டும் முதல்-அமைச்சர் பேச்சு

மேகதாது அணை விவகாரத்தில் தனது உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும் என்று வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-06-29 20:50 GMT

வேலூர்,

வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எ.வ.வேலு, காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வரவேற்றார். எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், மேயர் சுஜாதா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு முடிவற்ற திட்டப்பணிகள், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், பல்வேறு துறைகள் வாரியாக நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என மொத்தம் ரூ.455 கோடியே 82 லட்சத்துக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அடையாளம்

வேலூர் வீரத்தின் அடையாளம். விவேகத்தின் அடையாளம். விடுதலை, நல்லிணக்கம் மற்றும் போர்க்களத்தின் அடையாளமாக திகழ்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க வேலூரில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்டத்தின் அமைச்சரும் கழக பொதுச்செயலாளருமான துரைமுருகனை கலைஞர், பேராசிரியர் இடத்தில் வைத்து பார்க்கிறேன்.

அனைத்து தரப்பு மக்களுக்கு பாடுபடும் அரசாக தி.மு.க. திகழ்கிறது. அதுதான் திராவிட மாடல் அரசு. இந்த மாடல் ஆட்சிதான் இந்தியா முழுவதும் வழிகாட்டும் அரசாக திகழ்கிறது. இந்த தருணத்தில் வேலூரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது அனைத்து தரப்பினரையும் பாராட்டுகிறேன்.

ஓராண்டு கால ஆட்சி

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்யாததை நாங்கள் இந்த ஓராண்டு கால ஆட்சியில் செய்துள்ளோம் என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் அண்ணாந்து பார்க்கக்கூடிய நிலையில் தமிழகத்தை வைத்துள்ளோம்.

பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்தபோது அவரது முன்னிலையில் மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறியிருந்தேன்.

எந்த சமரசத்துக்கும் இடம் இல்லாமல் போராடும் அரசாக தி.மு.க. இருக்கும். மேகதாது அணை விவகாரத்தில் தனது உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும்.

தமிழகத்தின் உயிர் நாடி பிரச்சினையில் காவிரி பிரச்சினையும் ஒன்று. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரில் முழு உரிமை உள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்டமிட்டு வருகிறது. அதை தொடக்கம் முதலே தடுத்து எதிர்த்து வருகிறோம்.

பிரதமருக்கு கடிதம்

ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்து நிதி ஒதுக்குவது, சட்டம் போடுவது, மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது என செயல்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் நாமும் அதற்கு தடுப்பணை போட்டு வருகிறோம்.

2 வாரங்களுக்கு முன் கர்நாடக அரசு அதிகமான நாட்டம் காட்டியது. காவிரி ஆணையத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என கூறியபோது இதுதொடர்பாக நான் பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.

கர்நாடக முதல்-மந்திரி இதுதொடர்பாக டெல்லி சென்ற நிலையில் நமது நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவும் மத்திய மந்திரியை சந்தித்து பேசினார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் காவிரி நீர் தொடர்புடைய அரசு மற்றும் மத்திய அரசின் அனுமதியின்றி அணை கட்ட கூடாது என்று கூறியுள்ளது. ஆகவே கர்நாடக அரசின் முடிவானது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது.

எனவே கர்நாடக அரசுக்கு மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு எந்தவித தொழில் நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்க கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்