தமிழகத்தில் நெல் கொள்முதலை முன்னதாக தொடங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால் தமிழகத்தில் நெல் கொள்முதல் காலத்தை முன்னதாக தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-06-21 23:58 GMT

சென்னை,

இந்த காரீப் சந்தை பருவத்தில் நெல் கொள்முதல் காலத்தை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கடிதத்தை எழுதுகிறேன். சுதந்திர இந்தியா வரலாற்றில் முதன்முறையாக குறுவை நெல் சாகுபடிக்காக, வழக்கமான தேதியான ஜூன் 12-ந்தேதிக்கு முன்பதாக மே 24-ந்தேதியன்றே மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

கடந்த நெல் சாகுபடி பருவத்தில் நீரை முறையாக பயன்படுத்தியதாலும், மழை நன்றாக பெய்ததாலும் மேட்டூர் நீர்த்தேக்கம் நிறைவாக இருந்தது. இதை எதிர்பார்த்து முக்கிய காவிரி டெல்டா பகுதிகளில் 4,964.11 கி.மீ. நீளத்திற்கு கால்வாய்களிலும், இணை வாய்க்கால்களிலும் தூர்வாருவதற்கு 8.4.2022 அன்றே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்காக ரூ.80 கோடி அனுமதிக்கப்பட்டது. மேலும் ரூ.61 கோடி செலவில் விவசாயிகளுக்காக வேளாண்மை தொகுப்பு வழங்கப்பட்டது. தேவைப்பட்ட பகுதிகளுக்கு அதிக விளைச்சலைத் தரும் தரமான விதைகள் வழங்கப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்த தருணத்தில், நெல் விதைப்பிற்கு முன்பாகவே காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்த உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பொதுவாக நெல் அறுவடை காலம், செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் இருக்கும். குறிப்பாக, தென்மேற்கு பருவமழை காலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காலம் ஆகியவற்றையொட்டி இருக்கும்.

இதனால் மழையில் நெல் மூழ்குவது, புயலினால் சேதம் அடைவது போன்ற பேரிடர்கள் நடப்பதுண்டு. ஆனால் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு குறுவை நெல் அறுவடை, ஆகஸ்டு கடைசி வாரத்தில் தொடக்கிவிடும்.

நெல் கொள்முதல்

ஆனால் காரீப் சந்தை காலத்திற்காக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய குறைந்தபட்ச ஆதார விலை, வரும் அக்டோபர் 1-ந்தேதியில் இருந்துதான் அமலுக்கு வரும். ஆனால் தமிழக அரசின் முன்னேற்பாடுகள் மற்றும் முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, வரும் ஆகஸ்டு இறுதி வாரத்திலேயே குறுவை நெல் அறுவை தொடங்கிவிடும்.

எனவே ஒரு மாதத்திற்கு முன்பாகவே, அதாவது அக்டோபர் 1-ந்தேதிக்கு பதிலாக செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்தே நெல் கொள்முதலை தொடங்க மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்.

இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால், செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்தே நெல் கொள்முதலை தொடங்கினால், விவசாயிகளுக்கு நெல்லுக்கு நல்ல விலை கிடைப்பதோடு, குறைந்தபட்ச ஆதார விலை உயர்வை அவர்கள் உண்மையாக அனுபவிக்க வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்