அரசு ஊழியர்களுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

அரசு ஊழியர்களுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்;

Update: 2023-02-10 18:45 GMT

நாகையில் அரசு ஊழியர்களுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடங்கின. வயது அடிப்படையில் போட்டிகளை நடத்த அரசு ஊழியர்கள் வலியுறுத்தினர்.

அரசு ஊழியர்களுக்கான போட்டிகள்

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2022-23-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அளவிலும், அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான அளவிலும், கல்லூரி அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

3000, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வாலிபால், கபடி, இறகுபந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் போலீஸ் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களே அதிக போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதனால் அரசு ஊழியர்கள் கவலையடைந்தனர்.

வயது அடிப்படையில் போட்டி நடத்த வேண்டும்

இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறுகையில், முதல்-அமைச்சர் கோப்பையில் அரசு ஊழியர்களுக்கு என ஒரு பிரிவு ஒதுக்கி விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது வரவேற்கத்தக்கது. இதில் 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்று வருகிறோம். போலீசார், தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த சீருடை பணியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

புதிதாக பயிற்சி முடித்துவிட்டு வேலைக்கு வந்த சீருடை பணியாளர்கள், இளைஞர்களை போல திறமையாக விளையாடி வருகின்றனர். முழு உடல் தகுதி உள்ள அவர்களுடன், எங்களைப்போன்ற அரசு ஊழியர்கள் எப்படி போட்டி, போட்டு விளையாட முடியும்.

சீருடை பணியாளர்களுடன், 30 வயதுக்கு மேல் உள்ள அரசு ஊழியர்களை போட்டியிட வைத்தால் எங்களால் எப்படி வெற்றி பெற முடியும். அரசு ஊழியர்கள் பிரிவில் தடகளம் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் சீருடை பணியாளர்களே அதிகம் வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே அரசு ஊழியர்கள் பிரிவில் நடத்தப்படும் முதல்-அமைச்சர் கோப்பையில் வயது அடிப்படையில் போட்டிகள் நடத்த வேண்டும். அப்போது தான் எங்களைப் போன்ற அரசு ஊழியர்கள் ஆர்வமாக பங்கேற்பார்கள் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்